Thursday, April 23, 2009

உண்மையை மறுக்காதீர்கள்

அல்லாஹ் மனிதர்களுக்குத் தனது ரஸூல்மார்களை அனுப்பினான்; அல்லாஹ்வுக்கு மட்டுமே வணக்கம் செலுத்தி, அவனை ஒருமைப் படுத்துவதின் பால் மக்களை அழைக்குமாறு அவர்களுக்கு உத்தரவுமிட்டான். எனினும் அதிகமான சமுதாயங்கள், தங்கள்பால் அனுப்பப்பட்ட தூதர்களைப் பொய்யாக்கினார்கள்; அம்மக்கள் தாம் அழைக்கப்பட்ட தௌஹீதுக்கும் மாறு செய்தார்கள். அவர்களுடைய முடிவு அழிவாகவே இருந்தது.

'எவனுடைய உள்ளத்தில் ஒரு கடுகளவேனும் பெருமை உண்டோ, அவன் சுவர்க்கம் பிரவேசிக்க மாட்டான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, தொடர்ந்து பின்வருமாறு கூறினார்கள். 'பெருமை என்பது உண்மைக்கு மாறானதும், மனிதர்களுக்கு இழிவானதுமாகும்' ஆதாரம்: முஸ்லிம்

இதன்படி நிராகரிப்பவர்களுக்கு ஒப்பாகக் கூடியதும், சுவர்க்கம் பிரவேசிக்கத் தடையாயிருப்பதுமான பெருமையை விட்டொழிப்பதும், உண்மையையும், நல்லுபதேசத்தையும் மறுக்காமலிருப்பதும் ஒவ்வொரு மூமினின் மீதும் கடமையாகும். அறிவு என்பது ஒரு மூமினுடைய தவறிப்போன பொருள்; அதனை எவ்விடத்தில் கண்டு கொள்கிறானோ, அப்பொழுது அதனைப் பெற்றுக் கொள்வான்.

இதனால் அறிவு என்பது எந்த மனிதனிடமிருந்து பெற்றுக் கொண்டாலும், அதனை ஏற்றுக் கொள்வது கடமையாகின்றது. ஷைத்தானிடமிருந்து கிடைத்தாலும் உண்மையை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். பின்வரும் சம்பவம் இதற்கு ஆதாரமாக அமைகின்றது.

'நபி (ஸல்) அவர்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களை 'பைதுல்மால்' பொதுநிதிக்குப் பாதுகாவலராக நியமித்தார்கள். ஒரு தினம் அதிலிருந்து திருடுவதற்கு ஒரு திருடன் வந்தான். உடனே அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். திருடன் தனது ஏழ்மையையும், இயலாமையையும் பற்றிச் சொன்னவனாகக் கெஞ்ச ஆரம்பித்தான். இதனால் அவனை விட்டு விட்டார்கள்.

இரண்டாம் முறை மீண்டும் வந்தான்; அப்பொழுதும் அவனைப் பிடிக்கவே முன்பு போலவே கெஞ்சினான். தொடர்ந்து மூன்றாம் முறையும் வந்தான். அப்பொழுது அவனைப் பிடித்துக் கொண்டு 'உன்னை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்லப் போகிறேன்' என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்பொழுது அவன் 'என்னை விட்டுவிடு! குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை உமக்குக் கற்றுத் தருகிறேன். அதனை நீர் ஓதி வந்தால் ஷைத்தான் உம்மிடம் நெருங்க மாட்டான்' என்று கூறினான். அப்பொழுது அபூ ஹுரைரா (ரலி) அவ்வசனம் யாது என்று வினவினார்கள். அதற்கவன் அதுதான் 'ஆயத்துல் குர்ஸி' (2:255) என்று கூறினான். அப்பொழுது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அவனை விட்டு விட்டார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் தான் கண்டதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள். அப்பொழுது நபியவர்கள் 'உம்முடன் பேசியது யாரென நீர் அறிவீரா? அவன்தான் ஷைத்தான்; அவன் உம்மிடத்தில் சொன்னது உண்மை; ஆனால் அவன் பொய்யனாவான்' என்று கூறினார்கள். ஆதாரம்: புகாரி

இனிதே முடிவுற்றது

வஸ்ஸலாம்

Wednesday, April 22, 2009

கண்மூடித்தனமாக பின்பற்றல்

"அல்லாஹ் அருளிய (வேதத்)தின் பாலும் (அவனுடைய) ரஸூலின் பாலும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், 'எங்களுடைய மூதாதைகள் எதன் மீதிருக்கக் கண்டோமோ, அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்குப் போதும்' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் யாதொன்றையும் அறிந்து கொள்ளாமலும் நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்)?" (5:104)

நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களை நோக்கி குர்ஆனின் பக்கமும், அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி, அவனிடம் மட்டுமே தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திப்பதின் பக்கமும் வாருங்கள் என அழைத்தபோது 'எமது மூதாதைகளின் நடைமுறை எமக்குப் போதுமானது' என்று அம்மக்கள் சொன்னார்கள். உங்களுடைய மூதாதைகள் அறிவீனர்கள்; எதனையும் அறியாதவர்கள்; நேர்வழியடையாதவர்கள் என்று மேற்காட்டிய வசனத்தின் மூலம் அல்லாஹ் கூறி இணை வைப்பவர்களின் கூற்றை மறுக்கிறான்.

கண்மூடித்தனமான பின்பற்றலையுடைய முஸ்லிம்களும் மூதாதைகளைப் பின்பற்றுவதில் இதே நிலையில் இருக்கின்றனர். 'அல்லாஹ்வுக்கு 'கை' உண்டு' என்பதை உங்களுடைய மூதாதைகள் அறிந்தவர்களாயிருந்தனரா? என்று ஒரு வகுப்பிலே அறிஞர்களில் ஒருவர் சொல்லக் கேட்டேன்.

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தது பற்றிச் சொல்லும்போது "இப்லீஸே! நானே எனது இருகைகளால் படைத்ததற் (ஆதமுக்)கு நீ சிரம் பணியாது உன்னை தடை செய்ததென்ன? (38:75) என்று கூறுகிறான்.

'எனது இருகைகள்' என்ற மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளதை, மூதாதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முஸ்லிம்கள் மறுக்கின்றனர். இங்கு தெளிவாகக் கூற்றப்பட்டுள்ள குர்ஆன் வசனத்துக்குத் தவறான கருத்து கொடுத்து, மூதாதைகளின் கொள்கையையே ஏற்றுக் கொள்கின்றனர்.

அல்லாஹ் தனது திருமறையில் "அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்" (42:11) என்று கூறும் ஆதாரத்துக்கமைவாக அல்லாஹ்வுடைய கையை அவனுடைய படைப்புகளுடைய கையுடன் ஒப்பிடக் கூடாது.

கண்மூடித்தனமான பின்பற்றலையுடைய இக்கால முஸ்லிம்கள் வெறும் யூகங்களைக் கொண்டு கூறப்பட்டுள்ளவற்றைத் தமது மார்க்கமாக ஏற்றுக் கொள்கின்றனர். அவர்களுடைய நம்பிக்கை தவறானது என்பதற்குத் தெளிவான குர்ஆன் வசனங்களையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் ஆதாரங்களாகக் காட்டினாலும் அவற்றை மறுத்து தமது முன்னோர்களின் வழிமுறையே சரியானதெனப் பிடிவாதமாகக் கூறுகின்றனர். இந்த முஸ்லிம்களுக்கும் நபி (ஸல்) அவர்களை எதிர்த்த மக்களுக்குமிடையில் வித்தியாசமெதுவுமுண்டா?

இங்கு தீங்கு ஏற்படக்கூடிய மற்றுமொரு 'தக்லீத்' உண்டு. பாபமான கருமங்களைச் செய்வதிலும், (பெண்கள் திரையின்றி) வெளியில் செல்வதிலும், இறுக்கமான ஆடைகள் அணிவதிலும் காஃபிர்களைத் தக்லீத் செய்வதாக அது இருக்கின்றது. நமக்கு பிரயோசனத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன கண்டுபிடிப்புகளில் மட்டும் அந்த காஃபிர்களைப் பின்பற்றுகின்றவர்களாக நாம் இருந்து கொள்வது முறையானதும் போதுமானதுமாகும்.

'அல்லாஹ் சொன்னான்; அவனுடைய ரஸூல் சொன்னார்கள்' என்று சொல்லும்போது, அதிகமான முஸ்லிம்கள் 'எங்களது ஷைக் (அதற்கு மாறாக) சொன்னார்கள்' என்று கூறி, அல்லாஹ்வினதும் அவனுடைய ரஸூலினதும் சொல்லுக்கு மதிப்பு அளிக்காதிருக்கின்றனர்.

"மூமின்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் முன்பாக(ப் பேசுவதற்கு) நீங்கள் முந்திக் கொள்ளாதீர்கள்!" (49:01) என்று அல்லாஹ் கூறுவதை இவர்கள் குர்ஆனில் ஓதவில்லையா? அதாவது 'அல்லாஹ்வுடைய சொல்லையும் அவனது ரஸூலுடைய சொல்லையும் விட வேறெவருடைய சொல்லையும் முற்படுத்தக் கூடாது' என்பதே மேற்படி வசனத்தின் அர்த்தமாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய ஓர் எச்சரிக்கை இவ்வசனத்துக்குப் பொருத்தமாக அமைகின்றது.

'வானத்திலிருந்து உங்களுக்குக் கல்மாரி பொழியுமோ என நான் அஞ்சுகிறேன். நானோ 'அல்லாஹ்வுடைய ரஸூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்' என்று சொல்கிறேன். நீங்கள் அபூபக்கர் சொன்னார்; உமர் சொன்னார் என்று அதற்கு (மாறாகச்) சொல்கின்றீர்கள்' என்று மக்களை நோக்கி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எச்சரித்தார்கள்.

தங்களுடைய தலைவர்களின் பேச்சுகளை ஆதாரமாகக் கொள்வோருக்கு, ஒரு கவிஞர் பின்வருமாறு எச்சரிக்கின்றார்.

'அல்லாஹ் சொன்னான்; அவனுடைய ரஸூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்' என்று உனக்கு நான் சொல்லுகிறேன். நீரோ 'நிச்சயமாக எனது ஷைக் இதனைச் சொன்னார்' எனப் பதிலளிக்கின்றாய்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

Tuesday, April 21, 2009

நாங்கள் கப்றுகளை ஸியாரத் செய்வது எவ்வாறு?

'நான் உங்களுக்குக் கப்றுகளை ஸியாரத் செய்வதைத் தடுத்துக் கொண்டிருந்தேன். அவற்றை ஸியாரத் செய்வது உங்களுக்கு நன்மையாக அமைவதற்காக இப்பொழுது ஸியாரத் செய்யுங்களென்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஆதாரம்: முஸ்லிம்

அடக்கஸ்தலத்தில் நுழையும்போது அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களுக்கு ஸலாம் சொல்வதும், அவர்களுக்காக துஆ கேட்பதும் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது.

'இங்கு அடக்கஞ் செய்யப்பட்டிருக்கும் கப்றாளிகளான மூமின்களே! அஸ்ஸலாமு அலைக்கும்; இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களுடன் வந்து சேர்ந்து கொள்வோம்; அல்லாஹ் எங்களையும் உங்களையும் (கப்றுடைய வேதனையிலிருந்து) பாதுகாக்க வேண்டுமென அவனிடம் வேண்டுகிறேன்' (முஸ்லிம்) என்று ஸியாரத்தின் போது ஓதிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

இதனையே நாமும் மொழிவது ஸுன்னத்தாகும். இதற்கு மாறாக இன்று நடைமுறையிலுள்ளவை அனைத்தும் ஸுன்னத்துக்கு முரணாகும்.

நபி (ஸல்) அவர்களின் வாக்குக்கமைவாக கப்றுகளின் மீது அமர்வதோ, அவற்றை மிதிப்பதோ கூடாது.

'கப்றுகளை நோக்கித் தொழாதீர்கள்! அவற்றின் மீது அமராதீர்கள்!' ஆதாரம்: முஸ்லிம்

வணக்கம் என்ற எண்ணத்துடன் கப்றைச் சூழ 'தவாப்' செய்தல் கூடாது. "(ஹஜ்ஜுக்குச் செல்லும் அவர்கள்) புராதன ஆலயத்தையும் 'தவாப்' செய்யவும்" (22:29) என்று குர்ஆனில் கூறப்படுவதன் மூலம் தவாப் செய்ய தகுதியுள்ள ஒரு ஆலயம் கஃபத்துல்லாஹ் மட்டுமேயாகும் என்று அல்லாஹ் கூறுகிறான். (பைத்துல் முகத்தஸ், மஸ்ஜிதுந் நபவி போன்றவைக்கூட இதற்கு உரித்தானவையல்ல)

குர்ஆனிலிருந்து எதனையும் அடக்கஸ்தலத்தில் ஓதக்கூடாதென பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

'நீங்கள் உங்களுடைய வீடுகளை(க் குர்ஆன் ஓதாத) அடக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! எந்த வீட்டில் ஸூரத்துல் பகறா ஓதப்படுகிறதோ அந்த வீட்டைவிட்டு ஷைத்தான் விரண்டோடுகிறான்' ஆதாரம்: முஸ்லிம்

அடக்கஸ்தலங்கள் குர்ஆன் ஓதும் இடமல்ல என்பதற்கு இந்த ஹதீஸ் ஒரு சைக்கினையாக அமைந்துள்ளது. கப்றுகளுக்கு அருகில் குர்ஆன் ஓதுவதாக வந்துள்ள ஹதீஸ்கள் ஸஹீஹானவையல்ல .

கப்றுகளில் உள்ளவர்கள் நபிமார்களாகவோ, அல்லது அவுலியாக்களாகவோ இருப்பினும் அவர்களிடம் உதவி தேடுதல் பெரிய ஷிர்க்காகும். அல்குர்ஆன் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகின்றது.

"நபியே நேரான மார்க்கத்தின் பக்கமே உமது முகத்தைச் சதா திருப்புவாயாக! இணைவைத்து வணங்குவோரில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். ஆகவே உமக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை (ஆண்டவன் என) நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அச்சமயமே அக்கிரமக்காரரில் நீரும் ஒருவராகி விடுவீர்" (10: 105,106)

கப்ரின்மீது மலர்வளையம் சாத்துவது தடை செய்யப்பட வேண்டும். ஏனென்றால், இது கிறிஸ்தவர்களுக்கு ஒப்பான ஒரு செயலாகவும், பிரயோசனம் எதுவுமில்லாமல் பணத்தை வீணாகச் செலவு செய்வதாகவும் இருக்கின்றது.

இதற்காக செலவு செய்யப்படும் பணம் ஸதகாவுடைய எண்ணத்துடன் ஏழைகளுக்குக் கொடுக்கப்படுமானால், இதன்மூலம் இறந்தவர்கள் பயனடைவதுடன், ஏழைகளும் பயனடைவார்கள்.

ஹதீஸில் வந்துள்ள தடைக்கமைவாக கப்றின் மீது கட்டிடம் அமைப்பதும், அதன்மீது மரணித்தவரின் பெயரோ, அல்லது குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், கவிகள் போன்றவைகளோ எழுதுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

'கப்றின் மீது சாந்து பூசுவதையும் அதன் மீது கட்டிடம் கட்டுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்' ஆதாரம்:முஸ்லிம்

கப்றுடைய அடையாளத்தை அறிந்து கொள்வதற்காக ஒரு சாணளவு உயர்த்தி வைத்தல் போதுமானது. உத்மான் இப்னு மழ்ஊன் (ரலி) அவர்களுடைய கப்றின் மீது, நபியவர்கள் அடையாளத்துக்காக ஒரு கல்லை வைத்து விட்டு 'எனது சகோதரனுடைய கப்றை அறிந்து கொள்ள அடையாளமிடுகிறேன்' என்று கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத் (ஹஸன்)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.