Monday, April 10, 2006

வெற்றிபெற்ற கூட்டத்தின் அடையாளம்


1. வெற்றிபெற்ற கூட்டம் மனிதர்களுக்கு மத்தியில் சிறுபான்மையாக இருக்கும். 'அபூர்வமான மனிதர்களுக்கு நல்வாழ்த்து உண்டாகட்டும் இவர்கள், அதிகமான தீய மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் ஸாலிஹான (நல்ல) மனிதர்கள். இவர்களுக்கு வழிபடுபவர்களை விட மாறு செய்பவர்களே அதிகமாக இருப்பார்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

அல்குர்ஆன் இவர்களைப் பற்றிப் புகழ்ந்து பின்வருமாறு கூறுகின்றது.

"எனது அடியார்களில் சொற்பமானவர்களே (எனக்கு) நன்றி செலுத்துபவர்களாக இருக்கின்றனர்" (34:13)

2. வெற்றிபெற்ற கூட்டத்தை அதிகமான மக்கள் எதிர்ப்பார்கள். அவர்களைப் பற்றி அவர்தூறான பலவற்றைச் சொல்வார்கள். பட்டப் பெயர்களைச் சொல்லி அழைப்பார்கள். நபிமார்களின் நடைமுறையைக் கொண்டு இவர்களுக்குப் படிப்பினை உண்டு என்பதைப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான்.

"இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும், ஜின்னிலும் உள்ள ஷைத்தான்களை நாம் விரோதிகளாக ஆக்கியிருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான (பொய்க்) கூற்றுக்களை இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். உம்முடைய இறைவன் நாடியிருந்தால், இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்க் கூற்றுக்களையும் விட்டொழியும்" (6:112)

நபி (ஸல்) அவர்கள், மக்களைத் தௌஹீதின் பக்கம் அழைக்கும் போது, அவர்களைப் 'பொய்யன்' என்றும் 'சூனியக்காரன்' என்றும் கூறினார்கள். அதே மக்கள் நபியவர்களது இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு முன்னால் அவர்களை நம்பிக்கையாளர் என்றும், உண்மை பேசுபவர் என்றும் கூறி அழைப்பவர்களாக இருந்தனர்.

3. அஷ்ஷெய்கு அப்துல் அஜீஸ் அப்துல்லாஹ் இப்னு பாஸ் அவர்களிடத்தில் 'வெற்றிபெற்ற கூட்டம் எது'? என்று கேட்கப்பட்ட போது, 'ஸலபிய்யூன்கள்' என்னும் முன்னோர்களான நபி (ஸல்) அவர்களினதும், ஸஹாபாக்களினதும் வழியில் எவர்களெல்லாம் இருக்கின்றனரோ, அவர்கள்தான் வெற்றிபெற்றவர்கள் என்று பதிலளித்தார்கள்.

மேற்காட்டியவை, வெற்றிபெற்ற கூட்டத்தின் சில வழிமுறைகளும், அடையாளங்களுமாகும். அல்லாஹ்வின் உதவிபெற்ற கூட்டமான வெற்றி பெற்றவர்களின் அடிப்படைக் கொள்கையில் நாமும் இருப்பதற்காக இன்ஷா அல்லாஹ் இந்நூலில் சில பிரிவுகளைச் சொல்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.