Saturday, August 30, 2008

ஷிர்க்கின் கேடுகளும் அதன் தீமைகளும்

நிச்சயமாக ஷிர்க்கின் தீமைகள் தனி மனித வாழ்க்கையிலும் கூட்டு வாழ்க்கையிலும் உண்டு. அவற்றில் மிக முக்கியமானவை பின்வருமாறு:

1. ஷிர்க் வைத்தல் மனித இனத்துக்கு இழிவை ஏற்படுத்துகின்றது. அது மனிதனுடைய கண்ணியத்தைக் குறைக்கின்றது. அவனுடைய அந்தஸ்தைத் தாழ்த்துகின்றது. அவனுடைய அந்தஸ்து யாதெனில், அல்லாஹ் அவனைப் பூமியில் தன்னுடைய பிரதிநிதியாக அமைத்து, அவனை கண்ணியப்படுத்தி, எல்லா வஸ்துக்களுடைய பெயர்களையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தான் என்பதாகும்.

வானம் பூமியிலுள்ள எல்லாவற்றையும் அவனுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். இவ்வமைப்பில் அவனுக்குத் தலைமைத்துவத்தையும் கொடுத்து விட்டான். எனினும் அவன் தனது மகிமையை மறந்து இவ்வுலகிலுள்ள அற்பமான சிலவற்றைத் தான் வணங்கி வழிபடக்கூடிய தெய்வங்களாக எடுத்துக் கொண்டான்.

மனிதனுக்கு ஊழியம் செய்வதற்கென்றும், அவன் அறுத்துப் புசிப்பதற்கும் அல்லாஹ் படைத்திருக்கும் காளைமாட்டைத் தமது வணக்கத்திற்குரிய தெய்வமாகப் பல இலட்சகணக்கான இந்தியர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். சில முஸ்லிம்கள், மரணித்து அடக்கம் செய்யப்பட்டவர்களின் கப்றுகளிடத்தில் சென்று அவர்களிடம் தமது தேவைகளை வேண்டுகின்றனர்.

அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களோ இவர்களைப் போன்ற (அல்லாஹ்வின்) அடிமைகள். தமக்குத்தாமே எந்தவித நன்மையோ, தீமையோ செய்துக் கொள்ள சக்தியற்றவர்கள். இன்று நாம் கண்கூடாகக் காணுகின்றவற்றில் மனிதன் செய்யும் ஷிர்க்கில் இதனைவிட இழிவான ஒன்றைக் காண முடியுமா?

மரணித்தவர்களைப் பொறுத்தமட்டில், உயிருடனிருப்பவர்கள் தமக்காக அல்லாஹ்விடம் துஆக் கேட்க வேண்டும் என்றளவு தேவையுடையவர்களாக இருக்கின்றனர். நாம், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம். அல்லாஹ்வையன்றி அவர்களிடம் எமது தேவைகளை வேண்டிப் பிரார்த்திக்க மாட்டோம். இதுபற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

"(நபியே!) அல்லாஹ்வையன்றி எவற்றை அவர்கள் (ஆண்டவனென) அழைக்கிறார்களோ அவற்றால், யாதொன்றையும் படைக்க முடியாது. அவைகளும் (அவனால்0 படைக்கப் பட்டவைகளாகும். (அன்றி அவை) உயிருள்ளவைகளுமல்ல; உயிரற்றவர்கள் (மரித்தோர்) எப்பொழுது (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவை அறியா. (ஆகவே அவை, அவர்களிடம் தேவைகளைக் கேட்கும் இவர்களுக்கு என்ன பலனளித்து விடும்)" (16:20,21)

"எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து (காகம், கழுகு போன்ற) பறவைகள் இராய்ந்து கொண்டு சென்றதைப் போலவோ; அல்லது வெகு தூரத்தில் காற்று அடித்துக் கொண்டு சென்றதைப் போலவோ ஆகிவிடுவான்" (22:31)

2. ஷிர்க் என்பது அனாச்சாரம், மூடக்கொள்கை ஆகியவற்றின் பிறப்பிடமாகும். ஏனென்றால் அல்லாஹ் அல்லாத நட்சத்திரங்கள், ஜின்கள், மனிதர்கள், ரூஹ்(உயிர்)கள் ஆகியவற்றுக்குச் சில ஆற்றல்கள் உண்டு என்று நம்புகின்றவனுடைய அறிவு எல்லாவித மூடக்கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளவும், எல்லா தஜ்ஜால்களையும் (பொய்யர்களையும்) உண்மைப்படுத்தவும் தயாராகின்றது.

இதனைக் கொண்டே சாத்திரக்காரர்கள், ஜோதிடர்கள், சூனியக்காரர்கள், நட்சத்திர சாஸ்திரம் பார்ப்பவர்கள் போன்றோர்களால் ஷிர்க்குகள் (இணைவைத்தல்) மிக வேகமாகப் பரவுகின்றன. இவர்கள் அல்லாஹ்வையன்றி வேறெவராலும் அறியமுடியாத மறைவானவற்றைத் தம்மால் அறிய முடியும் என்று அடித்துக் கூறுவர்.

3. ஷிர்க் மாபெரும் அக்கிரமமாகும். இது அடிப்படையிலேயே அக்கிரமம். ஏனென்றால் அடிப்படைகளில் மிக உன்னதமானது அல்லாஹ்வைத் தவிர வேறெந்த நாயனுமில்லை என்பதும், அவனைத்தவிர வேறெந்த இரட்சகனுமில்லை என்பதும், தீர்ப்பளிக்கக் கூடியவன் அவனையன்றி வேறெருவருமில்லை என்பதுமாகும்.

ஆனால் இணைவைக்கிறவனோ, அல்லாஹ்வைத்தவிர வேறு இரட்சகர்களை எடுத்துக் கொண்டு, அவனல்லாதவர்களின் தீர்ப்பை விரும்புகிறான். ஷிர்க் என்பது மனிதன் தனக்குத்தானே செய்து கொள்ளும் அக்கிரமமாகும். ஏனென்றால் இணைவைக்கிறவன், தன்னைப் போன்ற ஒரு சிருஷ்டிக்கு அல்லது தன்னைவிட தாழ்ந்த ஒருவனுக்குத் தன்னை அடிமையாக ஆக்கிக் கொண்டான். இந்த மனிதனை (மற்றவர்களுக்கு அடிமையாகாத அளவுக்கு) அல்லாஹ் சுதந்திரமானவனாகப் படைத்துள்ளான்.

ஷிர்க் பிறருக்குத் தீங்கிழைத்து, அக்கிரமம் செய்வதாகும். ஏனென்றால் எவன் அல்லாஹ்வுக்கு அவனல்லாதவனை இணையாக்குகின்றானோ, அவன் தகுதியில்லாத ஒன்றை அல்லாஹ்வுக்குச் சமப்படுத்தித் தீங்கிழைக்கிறான். இது மாபெரும் அக்கிரமமாகும்.

4. ஷிர்க் என்பது பயமும் சந்தேகங்களும் உதயமாகும் இடமாகும். எவனுடைய அறிவு சம்பிரதாயங்களை ஏற்று, அனாச்சாரங்களையும், பிழையான கொள்கைகளையும் உண்மைப் படுத்துகிறதோ அவன் பல திக்கிலும் பயப்படுகின்றவனாகவே இருப்பான்.

ஏனென்றால் அவன் பல தெய்வங்கள் மீதும் நம்பிக்கை வைத்தவனாவான். அவன் நம்பியுள்ள தெய்வங்கள் அனைத்தும் தமக்குத்தாமே நன்மையோ, தீமையோ செய்து கொள்ளச் சக்தியற்றவைகள். இதனால் தான் வெளிப்படையான எந்தவிதக் காரணமுமின்றி அர்த்தமற்ற பயமும், சகுனமும், பீடையும் இந்த ஷிர்க்கினால் பரவுகின்றன. பின்வருமாறு அல்லாஹ் சொல்வது போன்று இது அமைந்துள்ளது.

"நிராகரிப்போரின் இருதயங்களில் அதிசீக்கிரமாக நாம் பீதியை உண்டுபண்ணி விடுவோம். ஏனென்றால் அவர்கள் இணைவைப்பதற்கு (அல்லாஹ்) எவ்வித ஆதாரமும் அவர்களுக்கு அளிகாதிருக்க, அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்கள். அவர்கள் தங்குமிடம் நரகம்தான்" (3:151)

ஷிர்க் என்பது பிரயோசனமான அமல்களை வீணாக்கி விடுகின்றது. ஏனென்றால் அது (அல்லாஹ்விடத்தில் நெருங்குவதற்காக) இடைத்தரகர்கள் மீதும், பரிந்து பேசுபவர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளக் கற்றுக் கொடுக்கின்றது. இதனால் தான், 'தாம் எவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனரோ, அவர்கள் தமக்காக அல்லாஹ்விடத்தில் பரிந்து பேசுவார்கள்' என்று நம்பியவர்களாக ஸாலிஹான அமல்களை விட்டுவிட்டு பாவங்களில் மூழ்கி விடுகின்றனர்.

பின்வரும் மறைவசனத்தில் அல்லாஹ் சொல்கின்றவாறு இதுதான் பண்டைய கால அரபிகளின் நம்பிக்கையாக இருந்தது.

"(ஷிர்க் வைப்போர்) தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன், 'இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்குச் சிபாரிசு செய்பவை' என்றும் கூறுகின்றனர். (ஆகவே நபியே! நீர் அவர்களை நோக்கி) 'வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவை (உள்ளனவா? அவை)களை (இவைகள் மூலம்) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? (அவனோ யாவையும் நன்கறிந்தவன்;) அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவைகளை விட மிக்க உயர்ந்தவன்' என்றும் கூறும்" (10:18)

"ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டது தமது பாவங்களுக்குப் பரிகாரமாக இருப்பதற்காகவேயாகும்" என்று கிறிஸ்தவர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். இதுபோலவே சில முஸ்லிம்கள் தாம் சுவர்க்கம் பிரவேசிப்பதற்காக நபி (ஸல்) அவர்களுடைய 'ஷபாஅத்' கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாஜிபு(கடமை)களை விட்டுவிட்டு, ஹறாமானவற்றைச் செய்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமா (ரலி) அவர்களுக்குப் பின்வருமாறு சொன்னார்கள்.

'முஹம்மதுடைய மகள் பாத்திமாவே! எனது சொத்துக்களிலிருந்து நீ விரும்பியவற்றை என்னிடம் கேள்! (தந்து விடுகிறேன்) உனக்காக அல்லாஹ்விடத்தில் எதனையும் செய்துதர என்னால் முடியாது' ஆதாரம்: புகாரி.

5. நரகத்தில் நிரந்தரமாக ஷிர்க்கு காரணமாக அமைகின்றது. ஷிர்க் என்பது இவ்வுலகில் வீணான கருமத்தைச் செய்யவும் மறுமையில் நிரந்தர நரக வேதனையை அடைந்து கொள்ளவும் வழியை ஏற்படுத்துகின்றது. இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

"எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ, அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியை ஹறாமாக்குகிறான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை" (5:72)

நபி (ஸல்) அவர்களும் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

'அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்குப் பகரமாக அழைத்தவனாக எவன் மரணிக்கிறானோ அவன் நரகம் பிரவேசிப்பான்' ஆதாரம்: புகாரி.

6. ஷிர்க்கு முஸ்லிம் சமுதாயத்தைப் பிரித்துக் கூறுபோடுகின்றது. இதுபற்றி பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

"இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினையை உண்டுபண்ணி, (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர். (அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிமுள்ள (தவறான)தைக் கொண்டு சந்தோசப் படுகின்றனர்" (30:31,32)

மேற்காட்டிய ஷிர்க்கின் பிரிவுகள் அனைத்தும், ஷிர்க், அதனை விட்டு விலகுவதற்கு அவசியமாக மிகமகத்தான ஒரு கருமம் என்பதையும், அதில் ஈடுபடுவதைப் பயப்படுவது அவசியமாகும் என்பதையும் மிகத்தெளிவாக கூறிவிட்டன. ஏனென்றால் இது பாவத்திலேயே மிகப் பெரியதாகும். மனிதன் செய்யக்கூடிய ஸாலிஹான அமல்கள் அனைத்தையும் அழித்து விடக்கூடியதாக இது இருக்கின்றது. சிலவேளை அது இவ்வுலகில் மனிதனுக்குப் பயனளிப்பது போலவும் இருக்கும். ஆனால் மறுமையில் அது அவனுக்குப் பயனற்றதாகவே ஆகிவிடும். அல்குர்ஆன் அதனை பின்வருமாறு கூறுகின்றது.

"அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை நாம் (மறுமையில்) நோக்கினால் (அதில் யாதொரு நன்மையும் இல்லாததால்) பறக்கும் தூசிகளைப் போல் அவைகளை நாம் ஆக்கி விடுவோம்" (25:23)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.