Thursday, January 15, 2009

தடை செய்யப்பட்ட வஸீலா

தடுக்கப்பட்ட வஸீலா என்பது மார்க்கத்தில் எவ்வித ஆதாரமுமற்றதாகும். இது பல வகைப்படும்.

1. வஸீலா என்று சொல்லிக் கொண்டு இன்று நடைபெறுவது போன்று, மரணித்தவர்களிடம் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுதலும், அவர்களைக் கொண்டு உதவி தேடுவதும் மரணித்தவர்களிடம் வஸீலாத் தேடுவதாகும்.

மார்க்கம் இவ்வாறானதன்று. ஏனென்றால் வஸீலா என்பது, ஈமான் கொள்ளல், ஸாலிஹான அமல்கள் செய்தல், அல்லாஹ்வுடைய அஸ்மாஉல் ஹுஸ்னாக்களைக் கொண்டு பிரார்த்தித்தல் போன்ற மார்க்கம் அனுமதிக்கின்ற வழிகளைக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தலாகும். மரணித்தவர்களிடம் வேண்டுதல், அல்லாஹ்வைப் புறக்கணிப்பதாக அமையும். பின்வரும் அல்குர்ஆன் வசனத்துக்கமைவாக அது பெரிய ஷிர்க்கில் அடங்குகின்றது.

"உமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை (ஆண்டவன் என) நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அச்சமயமே நீரும் அக்கிரமக்காரர்களில் ஒருவராவீர்" (10:106)

2. நபி (ஸல்) அவர்களுடைய மகிமையைக் கொண்டு பிரார்த்தித்தல். 'அல்லாஹ்வே! முஹம்மத் (ஸல்) அவர்களுடைய மகிமையைக் கொண்டு என்மீது கருணை காட்டுவாயாக!' என்று பிரார்த்திப்பது பித்அத்தாகும். ஏனென்றால் ஸஹாபாக்களில் எவரும் இவ்விதம் பிரார்த்தித்தது இல்லை.

உமர் (ரலி) அவர்கள் மழை வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தித்த போது உயிருடனிருந்த அப்பாஸ் (ரலி) அவர்களுக்குத் துஆக் கேட்குமாறு கூறி, அந்த துஆவைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள். நபியவர்களது மௌத்துக்குப் பின் அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடவில்லை.

நபியவர்களது மௌத்துக்கு முன்னால் அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவதற்கு அனுமதியிருந்தது போலவே, மௌத்துக்குப் பின்னும் இருக்கும் என்றிருந்தால், மனுஜின் வர்க்கங்களில் மிகமிக மேலானவரான நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டு அப்பாஸ் (ரலி) அவர்களைக் கொண்டு, உமர் (ரலி) அவர்கள் துஆக் கேட்டிருக்க மாட்டார்கள்.

'எனது மகிமையைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடுங்கள்' என்று நபியவர்கள் சொன்னதாக சொல்லப்படும் ஹதீஸ் சரியானதன்று. பித்அத்தான இந்த வஸீலா சிலவேளை ஷிர்க்கின் பக்கம் கொண்டு செல்லும்.

ஷிர்க் ஏற்படுவது எவ்வாறெனில் நீதிபதியிடத்திலும், ஜனாதிபதியிடத்திலும் செல்வதற்கு இடைத்தரகர் ஒருவர் தேவை என்பது போலவே அல்லாஹ்விடம் நெருங்குவதற்கும் ஒரு தரகர் தேவை என்று ஒருவன் நம்புவதாகும். இந்த உதாரணத்தில் படைத்தவனைப் படைக்கப்பட்டவனுக்கு ஒப்பாக்குவதன் மூலம் அவன் ஷிர்க் வைக்கிறான்.

'அல்லாஹ்விடத்தில் அவனல்லாதவனைக் கொண்டு உதவி தேடுவதை நான் கடுமையாக வெறுக்கிறேன்' என்று இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

'யாரஸூலுல்லாஹ்! எனக்காக அல்லாஹ்விடம் துஆக் கேளுங்கள்' என்று நபியவர்களது மௌத்துக்குப் பின் கேட்பது அனுமதியற்றதாகும். ஏனென்றால் பின்வரும் நபிமொழிக்கு அமைவாக ஸஹாபாக்கள் அவ்விதம் துஆக் கேட்டதே இல்லை.

'மனிதன் மரணித்து விட்டால் (அவனால் செய்யப்பட்ட) அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்றவை அனைத்தும் தொடர்பு அறுந்து விடும். 1. நிலையான தருமம் 2. பிரயோசனம் தரும் கல்வி 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் ஒரு ஸாலிஹான பிள்ளை'. ஆதாரம்: முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்களது மௌத்துக்கு முன்னால், ஸஹாபாக்கள் தமக்காக பிரார்த்திக்குமாறு நபியவர்களிடம் வேண்டியுள்ளார்கள். அதே ஸஹாபாக்கள் மௌத்துக்குப் பின்னால் அவ்விதம் நபியவர்களிடம் வேண்டியதே இல்லை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.