Thursday, March 26, 2009

பெரிய குஃப்ரும் அதன் வகைகளும்

'பெரிய குஃப்ர்' அதனைச் செய்கின்றவனை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றி விடுகின்றது. இதுதான் நம்பிக்கையின் அடிப்படையிலுள்ள குஃப்ராகும். (இறைநிராகரிப்பாகும்) இதன் வகைகள் அதிகமானவை.

1. பொய்யாக்குவதால் ஏற்படும் குஃப்ர்:- இது குர்ஆனையும் ஹதீஸையும், அல்லது இவ்விரண்டில் சில பகுதிகளைப் பொய்யாகுவதாகும். இதுபற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

"அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனைவிட, அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யாக்குபவனைவிட அக்கிரமக்காரன் யார்? (இத்தகைய) நிராகரிப்போரின் தங்குமிடம் நரகத்திலல்லவா இருக்கின்றது" (29:68)

"நீங்கள் வேதத்தில் சில கட்டளைகளை விசுவாசித்துச் சில கட்டளைகளை நிராகரிக்கின்றீர்களா?" (2:85)

2. உண்மையை ஒப்புக் கொண்டு வழிபடாமல் பெருமையடிப்பது கொண்டும், மாறுசெய்வது கொண்டும் ஏற்படும் குஃப்ர்:- இது ஷைத்தானுடைய குஃப்ரைப் போன்றதாகும். அல்குர்ஆன் இதுபற்றி பின்வருமாறு கூறுகின்றது.

"பின்னர் நாம் மலக்குகளை நோக்கி 'ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து 'ஸுஜூது' செய்)யுங்கள் எனக் கூறியபோது, அவர்கள் (யாவரும்) 'ஸுஜூது' செய்தார்கள். இப்லீஸைத் தவிர. அவனோ பெருமைக் கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான்" (2:34)

3. மறுமை நாளைக் கொண்டு சந்தேகப்படல், அதனை நிராகரித்தல், அதனை உண்மைப் படுத்தாதிருத்தல் போன்றவைகளைக் கொண்டு குஃப்ர் ஏற்படுத்தல்:- அல்குர்ஆன் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகிறது.

"(மறுமையை நிராகரிக்கும் ஒருவன்) மறுமை ஏற்படும் என்று நான் நம்பவேயில்லை. ஒருக்கால் நான் என் இறைவனிடம் கொண்டுப் போகப்பட்டாலும், இங்கிருப்பதைவிட, அங்கு மேலானவனாக இருப்பதையே காண்பேன் என்று (தனது சினேகிதனை நோக்கிக்) கூறினான். அதற்கு அவனுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய சினேகிதன் அவனை நோக்கி 'உன்னைப் படைத்தவனையே நீ நிராகரிக்கிறாயா? மண்ணிலிருந்து பின்னர் இந்திரியத்தி(ன் ஒரு துளியி)லிருந்து படைத்த அவன், பின்னர் ஒரு பூரண மனிதனாகவும் உன்னை அமைத்தான்" (18:36,37)

4. புறக்கணிப்பதைக் கொண்டு குஃப்ர் ஏற்படுத்தல்:- இஸ்லாத்தின் அம்சங்களை நம்பாமல் அவற்றைப் புறக்கணித்தல். அல்குர்ஆன் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகிறது.

"எவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிக்கின்றார்களோ அவர்கள், தங்களுக்குப் பயமுறுத்தி எச்சரிக்கப்பட்டதைப் புறக்கணிக்கின்றனர்" (46:3)

5. நயவஞ்சகத்தனமான குஃப்ர்:- இந்தப் பிரிவு நாவைக் கொண்டு இஸ்லாத்தை வெளிப்படுத்துவதும், உள்ளத்தாலும் செயல்களாலும் அதற்கு மாறாக நடப்பதுமாகும். அல்குர்ஆன் இதைக் குறித்து பின்வருமாறு கூறுகிறது.

"(இந்த நயவஞ்சகத்துக்குக்) காரணமாவது, இவர்கள் ஈமான் கொண்டு பின்னர் (அதனை) நிராகரித்து விட்டதுதான். ஆகவே அவர்களுடைய இருதயங்களில் முத்திரையிடப்பட்டு விட்டது. (எதையும்) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்" (63:3)

"'அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசங் கொண்டிருக்கிறோம்' எனக் கூறுவோரும் மனிதரில் சிலருண்டு. ஆனால் (உண்மையில்) அவர்கள் விசுவாசம் கொண்டவர்கள் அல்லர்" (2:8)

6. மறுப்பதைக் கொண்டு குஃப்ர் ஏற்படுத்தல்:- இந்தப்பிரிவு ஈமானின் கடமைகள், இஸ்லாத்தின் கடமைகள் போன்றவற்றிலுள்ள ஏதேனுமொன்றை மறுத்தலாகும். இது, தொழுகையைக் கடமை என்று ஏற்றுக் கொள்ளாமல் அதனை விட்டுவிடுவது போன்றதாகும். இப்படியானவன் காஃபிராவான். இவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியனவா (முர்தத்தா)வான். நீதித் தீர்ப்பளிக்கிறவன் அல்லாஹ்வுடைய தீர்ப்பை மறுப்பதும் இவ்வாறுதான். இதுபற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

"எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள், நிச்சயமாக நிராகரிப்பவர்களே!" (5:44)

'அல்லாஹ் அருளியதை மறுக்கிறவன் காஃபிராவான்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.