Monday, March 30, 2009

துன்பம் ஏற்படுவதற்கான காரணங்களும் அவற்றை நீக்குவதற்கான வழிகளும்.

துன்பங்கள் ஏற்படுவது பற்றியும் அவற்றை அடியார்களிடமிருந்து அல்லாஹ் நீக்குவது பற்றியும் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

"எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக் கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றிவிடுவதில்லை" (8:53)

"எந்த தீங்கும் உங்களை வந்தடைந்ததெல்லாம் உங்கள் கைகள் தேடிக்கொண்ட (தீ)வினையின் காரணமாகவே தான். ஆயினும் (அவற்றில்) அநேகமானவற்றை அவன் மன்னித்து விடுகிறான்" (42:30)

"மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீ)வினையின் காரணமாகக் கடலிலும் தரையிலும் தீமைகள் தோன்றி விட்டன. (அவற்றிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களீன் (தீ)வினைகளில் சிலவற்றை, அவர்கள் (இம்மையிலும்) சுகிக்கும்படி அவன் (அல்லாஹ்) செய்கிறான்" (30:41)

"ஓர் ஊரை, அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். அவ்வூர் (மிக்க செழிப்பாகவும்) அமைதியுடனும் அச்சமற்றும் இருந்தது. அதற்கு வேண்டிய பொருள்கள் யாவும் ஒவ்வொரு திசையிலிருந்தும் தடையின்றி வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் (அவ்வூர்வாசிகள் அல்லாஹ்வை நிராகரித்து) அல்லாஹ்வுடைய அரிட்கொளைகளுக்கு(ம் நன்றி செலுத்தாமல்) மாறு செய்தனர். ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களின் காரணமாக அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து, அவர்கள் அதனைச்) சுகிக்கும்படிச் செய்தான்" (16:112)

'எந்த ஒரு கூட்டமும், அது செய்த தீவினையின் காரணமாகவேயன்றி அல்லாஹ் அதற்குச் சோதனையை இறக்கவில்லை' என்று மேற்காட்டிய வசனங்கள் அனைத்தும் தெளிவுப்படுத்திக் காட்டுகின்றன. குறிப்பாக தௌஹீதைப் புறக்கணித்து ஷிர்க்கில் ஈடுபட்டதினாலேயே அது ஏற்பட்டது. முற்றாக ஷிர்க்கிலிருந்து நீங்கி, தௌஹீதின் பால் மீண்டு, இஸ்லாமிய அமைப்பை ஏற்றுக் கொண்டாலன்றி அந்தச் சோதனை நீங்காது.

இணைவைத்தவர்களீன் நிலையையும், துன்பத்தின் போது அவர்கள் அல்லாஹ்வை மட்டுமே அழைத்துப் பிரார்த்தித்ததையும், அதிலிருந்து அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்தபின், மீண்டும் ஷிர்க்கின் பால் திரும்பி, அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்ததையும் அல்குர்ஆன் பின்வருமாறு சொல்லிக் காட்டுகிறது. "(மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டு,பரிசுத்த மனத்தோடு அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றனர். அவன் அவர்களை கரையில் (இறக்கி) இரட்சித்துக் கொண்ட பின்னர், அவனுக்கே அவர்கள் (பலரை) இணையாக்குகின்றனர்" (29:65)

இக்காலத்திலுள்ள அதிகமான முஸ்லிம்கள் துன்பத்தில் சிக்கிக் கொண்டால் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கின்றனர். யாரஸூலல்லாஹ்! யாமுஹ்யித்தீன்! யாபதவீ! யாரிபாஈ! யாமுர்கீ! யாஷைகல் அரப்! என்றெல்லாம் உரத்த தொனியில் சப்தமிட்டு உதவிக்கழைத்து, இன்பத்திலும் துன்பத்திலும் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் மாறு செய்கின்றனர்.

உஹது யுத்தத்தின் போது முஸ்லிம்களில் ஒரு கூட்டம் தமது தலைவருக்கு மாறு செய்ததினால் யுத்தம் தோல்வியில் முடிந்தது. அப்பொழுது அல்லாஹ் அவர்களை நோக்கி "(நீங்கள் உங்கள் அரண்களை விட்டு விலகியதனால்) உங்களால் தான் இது ஏற்பட்டது என்று (நபியே!) நீர் கூறுவீராக!" (3:165) என்று கூறினான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.