Sunday, March 29, 2009

ஈமானுடைய கிளைகளின் வகைகள்

'ஈமான் என்பது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்ட கிளைகள் கொண்டதாகும். அவற்றில் மிக உயர்வானது 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லுவதாகும். மிகத் தாழ்ந்தது பாதையில் (பிறருக்குத்) தீங்கு ஏற்படுத்தக் கூடியதை அகற்றி விடுவதாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் சொன்னதை இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு பத்ஹுல் பாரியில் பதிவு செய்துள்ளார்கள்.

'ஈமானின் இந்தக் கிளைகளெல்லாம் உள்ளத்தின் செயல்கள், நாவின் செயல்கள், உடலின் செயல்கள் என்று பல பிரிவுகள் கொண்டதாகும்'.

1. உள்ளத்தின் செயல்கள் நம்பிக்கைகள், எண்ணங்கள் போன்றவைகளாகும். அவை இருபத்து நான்கு பிரிவுகளைக் கொண்டதாகும். அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்ளுதல்:- அல்லாஹ்வை அவனுடைய 'தாத்' (சுயதன்மை)கள் ஸிபாத் (இறைமையின் சிறப்பியல்பு)கள் ஆகியவைகளைக் கொண்டு ஒருமைப் படுத்துவது கொண்டு நம்பிக்கை கொள்வதாகும். இதுபற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

"அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்" (42:11)

அல்லாஹ் அல்லாத அனைத்தும் அவனால் படைக்கப்பட்ட புதியவை என நம்புவதும் ஈமானில் அடங்குவதாகும். அவனுடைய மலக்குகள், அவனால் அருளப்பட்ட வேதங்கள், அவற்றைப் போதித்த அவனுடைய ரஸூல்மார்கள் 'களா, கத்ரு' நன்மை தீமை ஆகியவற்றின் முடிவு அல்லாஹ்விடமே உண்டு என்பனவற்றை நம்புவதும் ஈமானாகும்.

கப்றில் விசாரணை, அதிலுள்ள சுகம், அதிலுள்ள தண்டனை, மறுமையில் எழுப்புதல், அனைவரையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்தல், விசாரணைச் செய்தல், (நன்மை தீமைகளை எடைபோடும்) மீஸான் (தராசு), ஸிராதுல் முஸ்தகீம், சுவர்க்கம், நரகம், அல்லாஹ்வுடைய நேசம், அவனுக்காக விருப்பம் கொள்ளல், அவனுக்காகக் கோபம் கொள்ளல், நபி (ஸல்) அவர்கள் மீது நேசம் கொள்ளல், அவர்களை மகிமைப் படுத்துவதாக நம்பிக்கை கொள்ளல் ஆகியவை அனைத்தும் ஈமானில் அடங்கும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லுதல், அவர்களுடைய ஸுன்னாவைப் பின்பற்றல், இக்லாஸு (உளத்தூய்மையு)னிருத்தல் போன்றவைகளும் ஈமானில் அடங்கும்.

முகஸ்துதி, நயவஞ்சகத்தனம், ஆகியவற்றை விடுதல், தௌபாச் செய்தல், (அல்லாஹ்வுக்குப்) பயப்படுதல், (அவனுடைய நற்கூலியை) ஆதரவு வைத்தல், (அவனுடைய அருட்கொடைகளுக்கு) நன்றி செலுத்தல், (நேர்ச்சைகளை) நிறைவேற்றல், பொறுமையாய் இருத்தல், 'கழாகத்ரைத்' திருப்தியாக ஏற்றுக் கொள்ளல், (அல்லாஹ்விடத்தில்) 'தவக்குல்' வைத்தல் (பாரம்சாட்டுதல்) பணிவுடன் நடந்து கொள்ளல் ஆகியவையும் ஈமானில் அடங்குவனவாகும்.

முதியவர்களுக்கு மரியாதை செய்தல், சிறியவர்கள் மீது அனபு காட்டல், தற்பெருமையை விடுதல், பொறாமை, வஞ்சகம், கோபம் போன்றவற்றை விடுதல் ஆகியனவும் ஈமானில் அடங்கும்.

2. நாவின் செயல்கள் ஏழுவகைகளை உள்ளடக்குகின்றன. அல்லாஹ்வைத்தவிர வேறெந்த நாயனுமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் ரஸூலாவார்கள் என்றி சான்றுகூறி நம்புவது கொண்டு தௌஹீதுக் கலிமாவை மொழிதல், குர்ஆனை ஓதுதல், கல்வி கற்றல், (அதனைப் பிறருக்குக்) கற்பித்தல், துஆக் கேட்டல், திக்ரு செய்தல், இஸ்திஃபார் செய்தல் (பிழை பொறுக்கத்தேடல்) தஸ்பீஹ் செய்தல், வீணான பேச்சுகளை விட்டுவிடல் ஆகியவை நாவின் செயல்களாக அமைகின்றன.

3. உடலின் செயல்கள் முப்பதெட்டு வகைப்படும்:-

I.இவற்றில் முதற்தரமானவை பதினைந்து. சுத்தமாயிருத்தல், உணவளித்தல் விருந்தினரை உபசரித்தல், பர்ளாகவும், நபிலாகவும் நோன்பு நோற்றல், இஃதிகாப் இருத்தல், லைலத்துல்கத்ரை அடைந்து கொள்ள முயற்சித்தல், ஹஜ், உம்ரா செய்தல், தவாப் செய்தல், மார்க்கத்துக்காக ஹிஜ்ரத் செய்தல், நேர்ச்சைகளை நிறைவேற்றல், தேவை ஏற்படும்போது அல்லாஹ்வைக் கொண்டு சத்தியஞ் செய்தல், குற்றப் பரிகாரங்களை நிறைவேற்றல். (உதாரணத்துக்கு சத்தியத்தை முறிக்கின்ற போதும், ரமலானில் நோன்பிருக்கும்போது மனைவியுடன் உடலுறவு கொண்டாலும் குற்றப்பரிகாரமாக மார்க்கம் விதித்ததை நிறைவேற்றல்).

II. வழிபாட்டுடன் தொடர்புடையவை ஆறுவகைப்படும். திருமணத்தின் மூலம் கற்பை காத்துக் கொள்ளல், உறவினர்களின் கடமைகளைச் செய்தல், பெற்றோருக்குப் பணிவிடை செய்தல், அவர்களுக்கு நோவினை செய்யாதிருத்தல், இஸ்லாமிய வழியில் பிள்ளைகளை வளர்த்தல், உறவுமுறையைப் பேணி நடத்தல், அல்லாஹ்வுக்கு மாறு செய்யாதிருக்கும் காலமெல்லாம் தலைவர்களுக்கு வழிபடல், அடிமை, ஊழியர் ஆகியோருடன் இரக்கமாக நடந்து கொள்ளல்.

III. பொதுப்படையானவை பதினேழாகும். நிர்வாகத்தை நீதியாக நடத்துதல், இஸ்லாமிய ஜமாஅத்துடன் சேர்ந்து கொள்ளல், இஸ்லாமிய அமைப்பிலுள்ள நிர்வாகிகளுக்கு வழிபடல், மனிதர்களுக்கிடையில் சமாதானம் செய்து வைத்தல், காரிஜிய்யாக்கள், கொடுமைக்காரர்கள் போன்றவர்களுக்கு எதிராக போராடுதல், நன்மை, தக்வா ஆகியவற்றின் மீது ஒன்றுபடல், நன்மையைக் கொண்டு ஏவுதல், தீமையை விட்டுத் தடுத்தல், இஸ்லாமிய அமைப்பின் கீழ் தண்டனைகளை நிறைவேற்றல், ஜிஹாது செய்தல், ஐக்கியமாக இருத்தல், அமானிதத்தைப் பாதுகாத்தல், அண்டைவீட்டாருக்கு உபகாரம் செய்தல், நல்ல காரியங்களைச் செய்தல், ஹலாலான வழியில் பணம், பொருள் சேமித்தல், முறையாக அதனைச் செலவு செய்தல், வீண் விரயம் செய்யாதிருத்தல், ஸலாம் சொன்னவருக்குப் பதில் ஸலாம் சொல்லல், தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொன்னால் 'யர்ஹமுகல்லாஹ்' (அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக!) என்று பதில் சொல்லல், மனிதர்களுக்கு தீங்கு ஏற்படக்கூடியவற்றைத் தடுத்து விடல், வீணான பொழுதுபோக்கை விட்டு விடல், பாதையில் தீங்கு ஏற்படுத்தக் கூடியவற்றை நீக்கிவிடல்.

மேற்கூறப்பட்ட ஹதீஸில், ஈமானின் படித்தரங்களில் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்ற கலிமாவே மிக உயர்வானதும், மிகச் சிறப்பானதுமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இஸ்லாமியப் பிரசாரப்பணி செய்வோர் உயர்வானதிலிருந்தே தமது பிரசாரத்தை ஆரம்பித்துப் பின்னர் தான் படிப்படியாகச் செய்யவேண்டும்.

கட்டிடம் கட்டுவதற்கு முன்னால் அஸ்திவாரமிட வேண்டும். மிக அவசியமானதையே முதலில் செய்ய வேண்டும். ஏனென்றால் தௌஹீதுக் கலிமாதான் அரபிகளையும் அஜமிகளையும் ஒன்றுபடுத்தி அவர்களுக்கிடையில் இஸ்லாமிய ஆட்சியையும், தௌஹீதுடைய ஆட்சியையும் நிறுவியது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.