Saturday, April 04, 2009

அஸ் - ஸலாத்துந் நாரிய்யா

ஸலாத்துன் நாரிய்யா (என்ற பித்அத்தான ஸலவாத்து) அதிகமான முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரபல்யமாக இருக்கின்றது. எவர் தனது தேவைகள் நிறைவேறவும், கஷ்டங்கள் நீங்கவும் எண்ணம் வைத்து, நேர்ச்சை செய்து 4444 விடுத்தங்கள் இதனை ஓதுவாரோ, அவருடைய நாட்டங்கள் நிறைவேறும் என்பது, இதனை ஓதி வருவோருடைய நம்பிக்கையாகும். இது எந்தவொரு ஆதாரமுமற்ற பிழையான ஒரு நம்பிக்கையாகும்.

குறிப்பாக இதன் வாசகங்களை உற்று நோக்கினால், இது வெளிப்படையானதொரு ஷிர்க்காக இருப்பதைக் காணலாம். அதன் வாசகம் மொழிபெயர்ப்புடன் பின்வருமாறு:-

'அல்லாஹும்ம ஸல்லி ஸலாதன் காமிலதன் வஸல்லிம் ஸலாமன் தாம்மன் அலா ஸய்யிதினா முஹம்மதின் அல்லதி தன்ஹல்லு பிஹில் உஹது வதன்பரிஜு பிஹில் குரபு வதுக்ளா பிஹில் ஹவாஇஜு வதுனாலு பிஹிர்ரகாஇபு வஹுஸ்னுல் கவதிமி வயுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹில் கரீம் வஅலா ஆலிஹி வஸஹ்பிஹீ பீ-குல்லி லம்ஹதின் வனபஸின் பிஅததி குல்லி மஃலூமின் லக'

(அல்லாஹ்வே! பூரணமான ஸலவாத்தையும், நிரப்பமான ஸலாமையும் எங்கள் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது சொல்வாயாக! அவர்களைக் கொண்டே துன்பங்கள் அகலும்; கஷ்டங்கள் நீங்கிவிடும்; தேவைகள் நிறைவேற்றி வைக்கப்படும்; ஆசைகள் பெற்றுக் கொள்ளப்படும்; மரணக்கஷ்டம் நீங்கி நல்ல முறையில் அமைவதும், மழை பொழிவதும் அவர்களது முகத்தைக் கொண்டுதான். கண் இமைக்குமளவும், மூச்சு விடுமளவும், எண்ணிக்கையில் (நபி (ஸல்) அவர்கள் மீதும்) அவர்களது குடும்பத்தார் தோழர்கள் அனைவர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுவாயாக!)

அல்குர்ஆன் அழைக்கக் கூடியதும், நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரக்கூடியதுமான ஏகத்துவக் கொள்கையானது, துன்பங்களைத் துடைத்தல், நெருக்கடிகளை நீக்குதல், தேவைகளை நிறைவேற்றி வைத்தல், மனிதன் தனது தேவைகளை கேட்கின்றபோது கொடுத்தல் ஆகிய எல்லாக் கருமங்களையும் அல்லாஹ் ஒருவன் மட்டுமேதான் நிறைவேற்றி வைக்கிறான் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உறுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை அவனுக்கு இஸ்லாம் வரையறுத்துக் கூறுகின்றது.

ஒரு முஸ்லிம் துயர் துடைக்கவோ, நோயைக் குணப்படுத்தவோ அல்லாஹ் அல்லாத எவரையும் அழைக்கக் கூடாது. அழைக்கப்படுகின்றவர் ஒரு மலக்காகவோ அல்லது ஒரு நபியாகவோ இருப்பினும் சரியே! இதோ அல்குர்ஆன், அல்லாஹ் அல்லாத நபிமார்களையோ, அவுலியாக்களையோ அழைப்பதை நிராகரிக்கின்றது.

"அவர்கள் (ஆண்டவன் என) அழைப்பவைகளும் (கூட தங்களுக்காகத்) தங்கள் இறைவனிடம் சிபாரிசு செய்வதற்கு (அல்லாஹ்விடம்) மிக நெருங்கியவர் யார் என்பதைத் தேடிக்கொண்டு, அவனுடைய அருளையே எதிர்பார்த்து, அவனுடைய வேதனைக்கும் பயப்படுகின்றன. ஏனென்றால் நிச்சயமாக உமது இறைவனின் வேதனையோ மிகமிகப் பயப்படக்கூடியதே" (17:57)

இவ்வசனம் ஈஸா (அலை) அவர்களை அழைக்கக் கூடிய ஒரு கூட்டத்தாருடைய விஷயத்திலோ, அல்லது மலக்குகளை அழைக்கக் கூடியவர்களுடைய விஷயத்திலோ, அல்லது ஜின்களிலுள்ள ஸாலிஹானவர்களில் ஒரு கூட்டத்தாரை அழைப்பவர்களுடைய விஷயத்திலோ அருளப்பட்டது என்பதாக முபஸ்ஸிரீன் (அல்குர்ஆன் விரிவுரையாளர்கள்)கள் கூறுகின்றனர்.

"அல்லாஹ் நாடினாலன்றி, நான் எனக்கு யாதொரு நன்மையும், தீமையோ செய்து கொள்ள எனக்குச் சக்தியில்லை. நான் மறைவானவற்றை அறியக் கூடுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; யாதொரு தீங்குமே என்னை அணுகியிராது. நான் பாவிகளுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், விசுவாசிகளுக்கு நன்மாராயங் கூறுபவனுமேயன்றி வேறில்லை" (7:188)

அல்குர்ஆன் மேற்சொன்னவாறு நபியவர்களை நோக்கிக் கட்டளை பிறப்பிக்கின்ற போது தன்னைக் கொண்டு கஷ்டங்கள் நீக்கப்படுமென்றும் துன்பங்கள் துடைக்கப்படுமென்றும் சொல்லப்படுவதை நபியவர்கள் எவ்வாறு பொருந்திக் கொள்வார்கள்? நபியவர்களுடைய பின்வரும் எச்சரிக்கை இதற்கு ஆதாரமாய் அமைகின்றது.

'நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து 'அல்லாஹ்வும் நீங்களும் நாடினால்' என்று தனது நாட்டமொன்றைச் சொல்ல வாயெடுத்தார்கள். அப்பொழுது நபியவர்கள் அம்மனிதரை நோக்கி 'என்னை அல்லாஹ்வுக்கு நிகராக ஆக்கி விட்டாயா? அல்லாஹ் மட்டும் நாடினால் என்று சொல்!' என்பதாக எச்சரித்தார்கள்' ஆதாரம்: நஸாஈ (ஹஸன்)

மேற்காட்டிய ஸலாத்துந் நாரிய்யாவில் 'பிஹீ' என்றுள்ள சொல்லை 'பிஹா' என்று மாற்றி ஓதினால் அது பிழையாக மாட்டாது. ஏனென்றால் 'பிஹீ' என்றால் நபியவர்கள் மூலம் என்றும் 'பிஹா' என்றால் நபியவர்கள் மீது சொல்லப்படும் ஸலவாத் மூலம் என்றும் பொருள்படும். அதேவேளை 'பிஹா' என்று மாற்றுவதனாலும் 'சங்கையான அவர் முகத்தைக் கொண்டு' என்று பொருள்படும். 'பிவஜ்ஹிஹில் கரீம்' என்ற வார்த்தையை அதிலிருந்து நீக்க வேண்டும்.

'ஸலவாத்' ஒரு வணக்கமாக இருப்பதால், வணக்கத்தைக் கொண்டு வஸீலாத் தேடுவது அனுமதிக்கப்பட்டது என்பதற்கமைவாக, அது சரியானதாகும். ஆனால் நடைமுறையிலுள்ள ஸலவாத் 'பிஹீ' என்று வருவதனால் அதனை ஓதுவது அனுமதிக்கப்பட மாட்டாது.

'பிஹா' என்று மாற்றி ஓதுவது சரியானது என்று இருந்தாலும் இந்த வாசக அமைப்பு சாதாரண மனிதனொருவனால் அமைக்கப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் (தொழுகையின் அத்தஹிய்யாத்தில் ஓதிவரும்) ஸலாதுல் இப்றாஹீமிய்யா என்று கூறப்படும் ஸலவாத் 'மஃஸூமான' முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட்டதாகும். ஸுன்னத்தான ஸலாதுல் இப்றாஹீமிய்யாவை விட்டுவிட்டு பித்அத்தான ஸலாதுந் நாரிய்யாவை நாம் எவ்வாறு ஓதலாம்?

ஸலாதுல் இப்றாஹீமிய்யா ஓதுவது ஸுன்னத் என்றிருந்தாலும், அதனைக்கூட 4444 விடுத்தங்கள் என்று எண்ணிக்கை குறிப்பிட்டு ஓதுவது அனுமதிக்கப்பட்டதன்று. நேர்ச்சை செய்வதற்குரிய ஒவ்வொரு வணக்கமும் அல்லாஹ்வாலும், அவனுடைய ரஸூலாலும் அமைத்துத் தரப்பட்டுள்ளது. 4444 விடுத்தங்கள் என்ற இந்த அமைப்பு அண்மைக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.