Thursday, April 16, 2009

குர்ஆன் உயிருடன் இருப்பவர்களுக்கே!

"(நபியே!) அவர்கள் இதன் (இக்குர்ஆனின்) வசனங்களைக் கவனித்து ஆராய்வதற்காகவும், (இதனைக் கொண்டு) அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும், மிக்க பாக்கியம்பெற்ற இவ்வேதத்தை நாமே உம்மீது அருள் புரிந்தோம்" (38:29)

முன்னோர்களான முஸ்லிம்கள் அல்குர்ஆனுடைய ஏவல்களை எடுத்து நடப்பது கொண்டும் அதன் விலக்கல்களைத் தவிர்ந்து நடப்பது கொண்டும் தங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொள்பவர்களாக இருந்தனர். அதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் நற்பாக்கியவான்களாக ஆகிவிட்டனர்.

பின்னர் வந்த முஸ்லிம்கள் குர்ஆனுடைய உபதேசங்களை விட்டுவிட்டு அதனை இறந்தவர்களுக்காக ஓதவும், கப்றுகளின் அருகிலும், மரணித்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் கூறும் நாட்களிலும் ஓத ஆரம்பித்தனர். இதன் காரணமாக இழிவும் பிரிவினையும் அவர்களை ஆட்கொண்டு விட்டன. பின்வரும் வசனத்தில் அல்லாஹ் அன்று கூறி வைத்தது இன்று உண்மையாகி விட்டது.

"(மறுமையில் அல்லாஹ்வுடைய) ரஸூல் (ஸல்) அவர்கள் 'என் இறைவனே! நிச்சயமாக என்னுடைய ஜனங்கள் இந்தக் குர்ஆனை முற்றிலும் வெறுத்து(த் தள்ளி) விட்டனர்" (25:30)
அல்லாஹ் அல்குர்ஆனை அருளிய நோக்கமெல்லாம் உயிருள்ளவர்கள் தமது வாழ்க்கையில்அதனைக் கொண்டு செயல்படுவதற்காகும். குர்ஆன் மரணித்தவர்களுக்கு உரியதன்று. அவர்களுடைய இவ்வுலக செயல்கள் யாவும் மரணத்துடன் அறுந்து விட்டன. அவர்களால் குர்ஆனை ஓதவோ, அதன்படிச் செயல்படவோ முடியாது. நாம் ஓதுவதால் கிடைக்கும் நன்மைகளை இறந்தவர்களுக்காகச் சேர்த்து வைக்கவும் முடியாது. மரணித்த மூமின்களைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

'மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்றவை அனைத்தும் தொடர்பறுந்து விடுகின்றன. ஒன்று: நிலையான தருமம். இரண்டு: பயன் தரும் கல்வி. மூன்று: அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஒரு நல்ல பிள்ளை.' ஆதாரம்: முஸ்லிம்.

"மனிதனுக்கு அவன் முயற்சித்துத் தேடிகொண்டதன்றி வேறொன்றும் கிடைக்காது"
(53:39)

இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் இவ்வசனத்துக்குப் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்கள்.

'ஒருவனுடைய பாவத்தை மற்றொருவன் சுமக்க மாட்டான் என்பது எப்படியோ, அவ்வாறே ஒருவன் தனக்குத் தானே தேடிக் கொண்டதன்றி அவனுடைய நன்மையை மற்றொருவனுக்குச் சேர்த்து வைக்க முடியாது'

இமாம் ஸாபிஈ (ரஹ்) அவர்கள் மேற்காட்டிய அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு, அல்குர்ஆனை ஓதி, அதன் நன்மைகளை இறந்தவர்களுக்குச் சேர்த்து வைக்க முடியாது என்று தீர்ப்பளித்து உள்ளார்கள். ஏனென்றால் இது (மரணித்த) அவர்களுடைய முயற்சியோ, செயலோ அல்ல என்றும் கூறினார்கள்.

இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதி அதன் நன்மைகளை மரணித்தவர்களுக்குச் சேர்த்து வைப்பதைத் தனது உம்மத்துக்கு மார்க்கமாக்கவுமில்லை. அதன்பால் அவர்களைத் தூண்டவுமில்லை. சரியான ஓர் ஆதாரத்தைக் கொண்டோ, அல்லது ஒரு சைக்கினையைக் கொண்டோ இதனைக் காட்டித் தரவுமில்லை.

ஸஹாபாக்களில் ஒருவரைக் கொண்டேனும் இது ஒரு நடைமுறையாக எமக்கு வந்ததில்லை. இது ஒரு நல்ல செயலாக இருந்திருக்குமென்றால், இவ்விஷயத்தில் ஸஹாபாக்கள் எம்மைவிட முந்திக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வை நெருங்கக்கூடிய வழிகள் ஆதாரங்களைக் கொண்டு வந்தவைகளால் மட்டிடப்பட்டுள்ளன. அபிப்பிராயங்களைக் கொண்டு அவை விரிவடைய மாட்டா.

இறந்தவருக்காக துஆக் கேட்பது, தான தருமங்கள் கொடுப்பது போன்றவற்றுடைய நன்மைகள் இறந்தவரைச் சென்றடையும் என்பது கருத்து முரணில்லாத ஆதாரபூர்வமானதாகும். மார்க்கத்தை அமைத்துத் தந்த நபி (ஸல்) அவர்கள் இவ்விஷயத்தில் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

குர்ஆன் ஓதப்படுமென்றால் அது மரணித்தவருக்குத்தான் என்று கருதுமளவு சமூகத்தில் சிந்தனை மாறுபட்டு விட்டது. குர்ஆன் ஓதுதல் மௌத்துக்கோர் அடையாளம் என்றளவு நிலைமை இருக்கின்றது.ஒருவருடைய வீட்டில் குர்ஆன் ஓதும் சத்தம் கேட்டால் அங்கு எவரேனும் மரணித்து விட்டாரோ என்று நினைக்குமளவு இன்று குர்ஆனுடைய நிலை இருக்கின்றது.

நோயுற்றிருந்த ஒருவரைச் சந்திக்க வந்தவர்களில் ஒருவர் அவருக்கருகில் குர்ஆன் ஓத ஆரம்பித்தார். இதனைச் செவியுற்ற அந்த நோயாளியுடைய தாயார் 'நீர் குர்ஆன் ஓதுமளவு எனது மகன் மரணித்து விடவில்லை' என்று கத்திக் கொண்டே சொன்னாள்.

ஒருவர் ஒரு நோயாளிக்கு அருகில் ஸூரத்துல் பாத்திஹாவை ஓதிக் கொண்டிருந்தார். அந்நோயாளியின் சகோதரி இதனைச் செவிதாழ்த்திய போது, தான் இதனை விரும்பவில்லை என்றும், நீ இதனை அவருக்கருகில் ஓதும்போது அவருடைய மௌத்தை இது நினைவுப்படுத்துகின்றது என்றும் அப்பெண்மணி கூறினாள். ஏனென்றால் மனிதன் மௌத்தை விரும்பமாட்டான்; அதனை வெறுக்கின்றவனாகவே இருக்கின்றான்.

தொழுகையை விட்ட ஒருவன் தனது மௌத்துக்குப் பின்னால் தனக்காக ஓதப்படும் குர்ஆனின் மூலம் என்ன பயனை அடையப் போகிறான்? குர்ஆனோ இவனுக்கு 'வைல்' என்னும் நரகத்தையும் கடுமையான தண்டனையையும் பற்றி முன்னறிவிப்புச் செய்து கொண்டிருக்கின்றது.

"தொழுகையில் பாராமுகமாயிருக்கும் தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் (தொழுத போதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுவார்கள்" (107:4,5)

தொழுகின்றவன் உரிய நேரத்தில் தொழாமல் பாராமுகமாயிருக்கும் போது, அவனுக்கு கிடைக்கும் தண்டனை இதுவென்றால், அறவே தொழாதவனின் நிலை என்ன?

மரணித்தவருக்காகக் குர்ஆன் ஓதும் மக்கள் ஆதாரமாகக் கொள்ளும் 'இக்ரஊ அலா மௌத்தாகும் யாஸீன்' என்ற ஹதீஸ் தரக்குறைவானதும் 'ஸஹீஹ்' அல்லாததுமாகும் என்று இப்னுல் கத்தான் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இமாம் தாரகுத்னீ (ரஹ்) அவர்கள் இதனை அறிவிப்பாளர்கள் வரிசை சரியானதல்ல என்றும், ஸஹீஹ் அல்லாதது என்றும் கூறியுள்ளார்கள்.

இந்த ஹதீஸிலுள்ள 'மௌத்தா' என்ற சொல்லுக்கு மரணம் சமீபித்தவர், மரணிக்கக் கூடியவர், மரணித்தவர் என்று பல அர்த்தங்களுண்டு. இதுபோன்ற வேறுசில ஹதீஸ்களின் ஆதாரத்துக்கமைவாக 'மௌத்தா' என்ற சொல்லுக்கு மரணம் சமீபித்த (ஸக்ராத்துடைய நிலையிலுள்ள)வர் என்றே கருத்துக் கொள்ள வேண்டும். இதன்படி இந்த ஹதீஸுக்கு 'உங்களில் மரணம் சமீபித்தவருக்கு யாஸீன் ஸூராவை ஓதுங்கள்' என்பதே அர்த்தமாகும்.

நபி (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ மரணித்தவருக்காக யாஸீன் ஸூராவையோ, ஸூரா பாத்திஹாவையோ, அல்லது குர்ஆனிலுள்ள வேறு ஸூராக்களையோ ஓதவில்லை.

நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை நோக்கி மையித்தை அடக்கஞ் செய்தபின் 'உங்களுடைய சகோதரனுக்காக பிழை பொறுக்கத் தேடுங்கள்; அவருக்காக (க் கலிமாவைக் கொண்டு) உறுதிப்பாட்டைத் தேடுங்கள்; ஏனென்றால் அவர் இப்பொழுது கேள்வி கேட்கப்படுகிறார்' என்று கூறினார்கள்'
ஆதாரம்: அபூதாவூத் (ஸஹீஹ்)

முஸ்லிமே! உனக்கென்ன கேடு பிடித்துள்ளது? உனது வாழ்க்கையில் குர்ஆனை கைவிட்டு விட்டாய்; அதனைக் கொண்டு செயல்படவில்லை. உனக்கு மௌத்து நெருங்குகின்ற போது இலேசான முறையில் நீ மரணமடைவதற்காக உனக்கு முன்னால் மக்கள் யாஸீன் ஸூராவை ஓதுவார்கள். குர்ஆன் அருளப்பட்டது அதன்படி நீ வாழ்வதற்காகவா? அல்லது (இலேசாக) மரணிப்பதற்காகவா?

அடக்கத்தலத்தில் நுழையும்போது பாத்திஹா ஸூராவையும், வேறுசில ஸூராக்களையும் ஓதுமாறு நபியவர்கள் தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் பின்வருமாறு ஓதக் கற்றுக் கொடுத்தார்கள்.

'அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி மினல் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹூ பிகும் லலாஹிகூன் அஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆபியா' ஆதாரம்: முஸ்லிம்

(மூமின்களான கப்ராளிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்; இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களுடன் வந்து சேர்ந்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றோம். அல்லாஹ் எங்களையும் உங்களையும் (அவனுடைய வேதனையை விட்டுப்) பாதுகாக்குமாறு வேண்டுகிறேன்)

மேற்படி ஹதீஸ் இறந்தவர்களுக்காகப் பிரார்த்தனைப் புரியுமாறு நமக்கு கற்றுத் தருகின்றதேயன்றி, அவர்களிடம் உதவித் தேட கற்றுத்தரவில்லை.

உயிருடனிருப்பவர்களில் எவர்களுக்கெல்லாம் செயல்பட முடியுமோ, அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுவதற்காக அல்லாஹ் அதனை அருளியுள்ளான். (மக்கள் எவ்வித ஆதாரமுமின்றி இறந்தவர்களுக்காக ஓதப் பயன்படுத்தும்) யாஸீன் ஸூராவில் 70ம் வசனத்தில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

"(இந்தக் குர்ஆன்) உயிரோடிருப்பவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து (மரித்தோர் போன்ற) நிராகரிப்போர் மீது தண்டனையைப் பற்றிய வாக்கை உறுதிப்படுத்துகின்றது" (36:70)

இந்தக் குர்ஆனை ஓதும்போது இறந்தவர்களால் செவிதாழ்த்த முடியாது; இதனைக் கொண்டு செயல்படவும் அவர்களால் முடியாது.

அல்லாஹ்வே! நபி (ஸல்) அவர்கள் நடந்த வழியில் சங்கையான இந்தக் குர்ஆனைக் கொண்டு செயல்படும் வாய்ப்பை எங்களுக்குத் தந்தருள்வாயாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்.