Wednesday, April 22, 2009

கண்மூடித்தனமாக பின்பற்றல்

"அல்லாஹ் அருளிய (வேதத்)தின் பாலும் (அவனுடைய) ரஸூலின் பாலும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், 'எங்களுடைய மூதாதைகள் எதன் மீதிருக்கக் கண்டோமோ, அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்குப் போதும்' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் யாதொன்றையும் அறிந்து கொள்ளாமலும் நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்)?" (5:104)

நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களை நோக்கி குர்ஆனின் பக்கமும், அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி, அவனிடம் மட்டுமே தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திப்பதின் பக்கமும் வாருங்கள் என அழைத்தபோது 'எமது மூதாதைகளின் நடைமுறை எமக்குப் போதுமானது' என்று அம்மக்கள் சொன்னார்கள். உங்களுடைய மூதாதைகள் அறிவீனர்கள்; எதனையும் அறியாதவர்கள்; நேர்வழியடையாதவர்கள் என்று மேற்காட்டிய வசனத்தின் மூலம் அல்லாஹ் கூறி இணை வைப்பவர்களின் கூற்றை மறுக்கிறான்.

கண்மூடித்தனமான பின்பற்றலையுடைய முஸ்லிம்களும் மூதாதைகளைப் பின்பற்றுவதில் இதே நிலையில் இருக்கின்றனர். 'அல்லாஹ்வுக்கு 'கை' உண்டு' என்பதை உங்களுடைய மூதாதைகள் அறிந்தவர்களாயிருந்தனரா? என்று ஒரு வகுப்பிலே அறிஞர்களில் ஒருவர் சொல்லக் கேட்டேன்.

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தது பற்றிச் சொல்லும்போது "இப்லீஸே! நானே எனது இருகைகளால் படைத்ததற் (ஆதமுக்)கு நீ சிரம் பணியாது உன்னை தடை செய்ததென்ன? (38:75) என்று கூறுகிறான்.

'எனது இருகைகள்' என்ற மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளதை, மூதாதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முஸ்லிம்கள் மறுக்கின்றனர். இங்கு தெளிவாகக் கூற்றப்பட்டுள்ள குர்ஆன் வசனத்துக்குத் தவறான கருத்து கொடுத்து, மூதாதைகளின் கொள்கையையே ஏற்றுக் கொள்கின்றனர்.

அல்லாஹ் தனது திருமறையில் "அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்" (42:11) என்று கூறும் ஆதாரத்துக்கமைவாக அல்லாஹ்வுடைய கையை அவனுடைய படைப்புகளுடைய கையுடன் ஒப்பிடக் கூடாது.

கண்மூடித்தனமான பின்பற்றலையுடைய இக்கால முஸ்லிம்கள் வெறும் யூகங்களைக் கொண்டு கூறப்பட்டுள்ளவற்றைத் தமது மார்க்கமாக ஏற்றுக் கொள்கின்றனர். அவர்களுடைய நம்பிக்கை தவறானது என்பதற்குத் தெளிவான குர்ஆன் வசனங்களையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் ஆதாரங்களாகக் காட்டினாலும் அவற்றை மறுத்து தமது முன்னோர்களின் வழிமுறையே சரியானதெனப் பிடிவாதமாகக் கூறுகின்றனர். இந்த முஸ்லிம்களுக்கும் நபி (ஸல்) அவர்களை எதிர்த்த மக்களுக்குமிடையில் வித்தியாசமெதுவுமுண்டா?

இங்கு தீங்கு ஏற்படக்கூடிய மற்றுமொரு 'தக்லீத்' உண்டு. பாபமான கருமங்களைச் செய்வதிலும், (பெண்கள் திரையின்றி) வெளியில் செல்வதிலும், இறுக்கமான ஆடைகள் அணிவதிலும் காஃபிர்களைத் தக்லீத் செய்வதாக அது இருக்கின்றது. நமக்கு பிரயோசனத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன கண்டுபிடிப்புகளில் மட்டும் அந்த காஃபிர்களைப் பின்பற்றுகின்றவர்களாக நாம் இருந்து கொள்வது முறையானதும் போதுமானதுமாகும்.

'அல்லாஹ் சொன்னான்; அவனுடைய ரஸூல் சொன்னார்கள்' என்று சொல்லும்போது, அதிகமான முஸ்லிம்கள் 'எங்களது ஷைக் (அதற்கு மாறாக) சொன்னார்கள்' என்று கூறி, அல்லாஹ்வினதும் அவனுடைய ரஸூலினதும் சொல்லுக்கு மதிப்பு அளிக்காதிருக்கின்றனர்.

"மூமின்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் முன்பாக(ப் பேசுவதற்கு) நீங்கள் முந்திக் கொள்ளாதீர்கள்!" (49:01) என்று அல்லாஹ் கூறுவதை இவர்கள் குர்ஆனில் ஓதவில்லையா? அதாவது 'அல்லாஹ்வுடைய சொல்லையும் அவனது ரஸூலுடைய சொல்லையும் விட வேறெவருடைய சொல்லையும் முற்படுத்தக் கூடாது' என்பதே மேற்படி வசனத்தின் அர்த்தமாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய ஓர் எச்சரிக்கை இவ்வசனத்துக்குப் பொருத்தமாக அமைகின்றது.

'வானத்திலிருந்து உங்களுக்குக் கல்மாரி பொழியுமோ என நான் அஞ்சுகிறேன். நானோ 'அல்லாஹ்வுடைய ரஸூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்' என்று சொல்கிறேன். நீங்கள் அபூபக்கர் சொன்னார்; உமர் சொன்னார் என்று அதற்கு (மாறாகச்) சொல்கின்றீர்கள்' என்று மக்களை நோக்கி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எச்சரித்தார்கள்.

தங்களுடைய தலைவர்களின் பேச்சுகளை ஆதாரமாகக் கொள்வோருக்கு, ஒரு கவிஞர் பின்வருமாறு எச்சரிக்கின்றார்.

'அல்லாஹ் சொன்னான்; அவனுடைய ரஸூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்' என்று உனக்கு நான் சொல்லுகிறேன். நீரோ 'நிச்சயமாக எனது ஷைக் இதனைச் சொன்னார்' எனப் பதிலளிக்கின்றாய்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.