Thursday, April 23, 2009

உண்மையை மறுக்காதீர்கள்

அல்லாஹ் மனிதர்களுக்குத் தனது ரஸூல்மார்களை அனுப்பினான்; அல்லாஹ்வுக்கு மட்டுமே வணக்கம் செலுத்தி, அவனை ஒருமைப் படுத்துவதின் பால் மக்களை அழைக்குமாறு அவர்களுக்கு உத்தரவுமிட்டான். எனினும் அதிகமான சமுதாயங்கள், தங்கள்பால் அனுப்பப்பட்ட தூதர்களைப் பொய்யாக்கினார்கள்; அம்மக்கள் தாம் அழைக்கப்பட்ட தௌஹீதுக்கும் மாறு செய்தார்கள். அவர்களுடைய முடிவு அழிவாகவே இருந்தது.

'எவனுடைய உள்ளத்தில் ஒரு கடுகளவேனும் பெருமை உண்டோ, அவன் சுவர்க்கம் பிரவேசிக்க மாட்டான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, தொடர்ந்து பின்வருமாறு கூறினார்கள். 'பெருமை என்பது உண்மைக்கு மாறானதும், மனிதர்களுக்கு இழிவானதுமாகும்' ஆதாரம்: முஸ்லிம்

இதன்படி நிராகரிப்பவர்களுக்கு ஒப்பாகக் கூடியதும், சுவர்க்கம் பிரவேசிக்கத் தடையாயிருப்பதுமான பெருமையை விட்டொழிப்பதும், உண்மையையும், நல்லுபதேசத்தையும் மறுக்காமலிருப்பதும் ஒவ்வொரு மூமினின் மீதும் கடமையாகும். அறிவு என்பது ஒரு மூமினுடைய தவறிப்போன பொருள்; அதனை எவ்விடத்தில் கண்டு கொள்கிறானோ, அப்பொழுது அதனைப் பெற்றுக் கொள்வான்.

இதனால் அறிவு என்பது எந்த மனிதனிடமிருந்து பெற்றுக் கொண்டாலும், அதனை ஏற்றுக் கொள்வது கடமையாகின்றது. ஷைத்தானிடமிருந்து கிடைத்தாலும் உண்மையை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். பின்வரும் சம்பவம் இதற்கு ஆதாரமாக அமைகின்றது.

'நபி (ஸல்) அவர்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களை 'பைதுல்மால்' பொதுநிதிக்குப் பாதுகாவலராக நியமித்தார்கள். ஒரு தினம் அதிலிருந்து திருடுவதற்கு ஒரு திருடன் வந்தான். உடனே அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். திருடன் தனது ஏழ்மையையும், இயலாமையையும் பற்றிச் சொன்னவனாகக் கெஞ்ச ஆரம்பித்தான். இதனால் அவனை விட்டு விட்டார்கள்.

இரண்டாம் முறை மீண்டும் வந்தான்; அப்பொழுதும் அவனைப் பிடிக்கவே முன்பு போலவே கெஞ்சினான். தொடர்ந்து மூன்றாம் முறையும் வந்தான். அப்பொழுது அவனைப் பிடித்துக் கொண்டு 'உன்னை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்லப் போகிறேன்' என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்பொழுது அவன் 'என்னை விட்டுவிடு! குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை உமக்குக் கற்றுத் தருகிறேன். அதனை நீர் ஓதி வந்தால் ஷைத்தான் உம்மிடம் நெருங்க மாட்டான்' என்று கூறினான். அப்பொழுது அபூ ஹுரைரா (ரலி) அவ்வசனம் யாது என்று வினவினார்கள். அதற்கவன் அதுதான் 'ஆயத்துல் குர்ஸி' (2:255) என்று கூறினான். அப்பொழுது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அவனை விட்டு விட்டார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் தான் கண்டதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள். அப்பொழுது நபியவர்கள் 'உம்முடன் பேசியது யாரென நீர் அறிவீரா? அவன்தான் ஷைத்தான்; அவன் உம்மிடத்தில் சொன்னது உண்மை; ஆனால் அவன் பொய்யனாவான்' என்று கூறினார்கள். ஆதாரம்: புகாரி

இனிதே முடிவுற்றது

வஸ்ஸலாம்