Friday, April 17, 2009

தடுக்கப்பட்ட 'கியாம்' (எழுந்து நிற்றல்)

'எவனொருவன் தனக்காக மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென விரும்புகிறானோ, அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் தேடிக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

'ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) அவர்களை விட மிக விருப்பத்துக்குரிய எந்த ஒரு மனிதரும் இருக்கவில்லை. நபியவர்களைக் கண்டால் அவர்கள் (மரியாதைக்காக) எழுந்து நிற்க மாட்டார்கள். நபியவர்கள் இதனை வெறுப்பதனாலேயே அவ்வாறு எழுந்து நிற்க மாட்டார்கள்' என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)

எந்த ஒரு மனிதன் தனக்கு மரியாதை செய்வதற்காக தான் செல்லுமிடத்தில் அமர்ந்திருப்பவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென விரும்புகிறானோ, அவன் நரகம் பிரவேசிப்பதற்கு இந்த செயல் காரணமாய் அமைகின்றது.

ஸஹாபாக்களைப் பொறுத்தமட்டில், நபி (ஸல்) அவர்களை மிகக் கடுமையாக நேசிக்கின்றவர்களாக இருந்தார்கள். இவ்வாறு இருந்தும் அவர்கள் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு நபியவர்கள் சமூகந்தந்தால், எழுந்து நிற்க மாட்டார்கள். இதனை நபியவர்கள் வெறுத்ததனாலேயே அவ்விதம் செய்யாதிருந்தார்கள்.

ஜனங்கள் சில மனிதர்களுக்காக எழுந்து நின்று மரியாதை செய்வதை வழமையாக்கிக் கொண்டுள்ளார்கள். ஒரு ஷைக் பாடம் நடத்துவதற்காகப் பிரவேசித்தால், அல்லது ஒரு இடத்தைத் தரிசிக்க சென்றால், இவ்வாறே ஒரு ஆசிரியர் மாணவர்களிடத்தில் நுழைந்தால் மாணவர்கள் உடனடியாக எழுந்து நிற்க வேண்டும் என்பதை வழமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். எவரேனும் அவ்வாறு எழுந்து நிற்கத் தவறினால், அவர் மரியாதைக் குறைவாக நடந்துக் கொண்டார் என்று கூறி, இழிவுபடுத்தப்படுவார்; அதட்டப்படுவார்.

ஷைஹ் அல்லது ஆசிரியர் ஜனங்கள் தமக்காக எழுந்து நிற்கும் போது, இதனைத் தடுக்காது மௌனமாக இருப்பதும், அல்லது எழுந்து நிற்கத் தாமதமாகின்றவர்கள் இழிவாகக் கருதப்படுவதும், ஆசிரியரும் ஷைகும் தமக்காக எழுந்து நின்று மரியாதை செய்வதை விரும்புகிறார்கள் என்று கருத இடமுண்டு. இதன் மூலம் இவர்கள் நரகில் பிரவேசிப்பதற்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

தமக்காக எழுந்து நிற்பதை இவர்கள் விரும்பவில்லை என்றால், அல்லது வெறுப்பார்களென்றால் எழுந்து நிற்பவர்களுக்கு இதனால் ஏற்படும் தீய விளைவுகளைக் கற்றுக் கொடுத்திருப்பார்கள்; அல்லது எழுந்து நிற்பதைத் தடுத்திருப்பார்கள். எழுந்து நிற்பதைத் தடைசெய்யும் ஹதீஸ்களை விளக்கியிருப்பார்கள்.

உள்ளே பிரவேசிக்கின்றவர்களுக்காகவோ, அறிஞர்களுக்காகவோ எழுந்து நின்று மரியாதை செய்கின்றவர்கள், ஷைத்தானுக்கு உதவுகின்றவர்களாகவே இருக்கின்றனர். 'நீங்கள் உங்கள் சகோதரனுக்கு எதிரான முறையில் ஷைத்தானுக்கு உதவுகின்றவர்களாக இருக்காதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: புகாரி

'நாங்கள் ஆசிரியர்களுக்காகவும், ஷைகுமார்களுக்காகவும் எழுந்து நிற்பதெல்லாம் அவர்கள் கற்ற கல்விக்கு மரியாதை செய்வதற்காகும்' என்று சிலர் கூறுகின்றனர். அவர்களை நோக்கி நாம் பின்வருமாறு கேட்க விரும்புகிறோம். நீங்கள் நபி (ஸல்) அவர்களுடைய அறிவில் சந்தேகிக்கின்றீர்களா? அவர்களுடைய தோழர்கள் நபியவர்களுக்கு அளித்த மரியாதையில் சந்தேகிக்கின்றீர்களா? நபியவர்கள் வரும் போதெல்லாம் அவர்கள் எழுந்து நிற்கவில்லை. ஏனென்றால் எழுந்து நிற்பதை மரியாதை என்று இஸ்லாம் கணிக்கவில்லை. நபியவர்களுக்கு வழிபடுதல், அவர்களுடைய கட்டளைகளுக்கு கட்டுபடுதல், ஸலாம் சொல்லல், முஸாபஹா (கைலாகு) செய்தல் போன்றவற்றையே இஸ்லாம் மரியாதை என்று கணிக்கின்றது.

நாங்கள் ஒரு சபையில் அமர்ந்திருக்கும் போது ஒரு செல்வந்தார் நுழைந்தால், ஜனங்கள் அவருக்காக எழுந்து நிற்பார்கள். அதேவேளை ஓர் ஏழை நுழைந்து விட்டாலோ, அவருக்காக எவரும் எழுந்து நிற்பதில்லை. இந்த நடைமுறை, அந்த ஏழைக்கு செல்வந்தன் மீதும், சபையில் இருப்பவர்கள் மீதும் குரோத மனப்பான்மையொன்றை ஏற்படுத்தி விடுகின்றது. இங்கு இஸ்லாம் தடைசெய்த பாரபட்சம் முஸ்லிம்களுக்கிடையில் ஏற்பட்டு விடுகின்றது. எழுந்து நின்று மரியாதை செய்ததே இதற்குக் காரணமாய் அமைகின்றது.

சிலவேளை மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்யாத அந்த ஏழை அல்லாஹ்விடத்தில், அந்தச் செல்வந்தனை விட அந்தஸ்தில் உயர்வாக இருக்க இடமுண்டு. இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

"உங்களில் எவன் மிகவும் பயபக்தியுடையவனாக இருக்கிறானோ, அவன்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியவானாவான்" (49:13)

'உள்ளே பிரவேசிக்கின்றவனுக்காக சபையிலுள்ளோர் எழுந்து நின்று மரியாதை செய்யாவிட்டால், அவன் அமர்ந்திருப்பவர்களைப் பற்றி ஏதாவது நினைக்க இடமுண்டு' என்று சிலவேளை ஒருவன் சொல்லலாம். சமூகம் கொடுப்பவனுக்கு நாங்கள் பின்வருமாறு விளக்கமளிப்போம்.

அவர்மீது நாங்கள் கொண்டிருக்கும் நேசமெல்லாம் எமது உள்ளங்களிலுண்டு. நாங்களோ, தனக்காக எழுந்து நின்று மரியாதை செய்வதை வெறுக்கக் கூடியவர்களாயிருந்த நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறோம். அவர்களுக்காக எழுந்து நிற்காத ஸஹாபாக்களைப் பின்பற்றுகிறோம். சபைக்கு சமூகமளிப்பவர் (இந்தச் செயலின் மூலம்) நரகம் பிரவேசிப்பதை வெறுக்கிறோம்.

சில ஷைகுமார்கள் 'கண்ணியத்துக்குரிய நபி (ஸல்) அவர்களுக்காக எழுந்து நிற்பது என் மீது கட்டாயமானதாகும்' என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் பாடியதாக ஒரு கவிதையைக் கூறுவார்கள். இது சரியான ஆதாரமுடையதன்று.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.