Saturday, April 18, 2009

எழுந்து நிற்பதற்கு அவசியமானதும், அங்கீகரிக்கப்பட்டதும்

சமூகமளிப்பவருக்காக எழுந்து நிற்பதை ஆகுமாக்கக்கூடிய ஸஹீஹான ஹதீஸ்களும், ஸஹாபாக்களுடைய நடைமுறையுமுண்டு. அந்த ஹதீஸ்களை விளங்குவதற்காக எங்களுடன் வாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் தன்னிடத்தில் பாத்திமா (ரலி) அவர்கள் வந்தால் எழுந்து நிற்பார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களிடம் சென்றாலும், அவர்கள் எழுந்து நிற்பார்கள். இது அனுமதியுடையதும், தேவையானதுமாகும். ஏனென்றால் தன்னிடத்தில் வந்த ஒரு விருந்தாளியை சந்தித்து அவரை சங்கைப்படுத்துவதற்காக எழுந்து நிற்பதாகவே இது அமைகின்றது. நபி (ஸல்) அவர்களின் சொல் பின்வருமாறு அமைந்துள்ளது.

'எவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறானோ அவன் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தவும்' ஆதாரம்: முஸ்லிம்.

இங்கு எழுந்து நிற்றல் என்பது வீட்டுச் சொந்தக்காரர் மட்டும் செய்யும் ஒரு செயலாகும்.

'உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

இந்த ஹதீஸ் கூறப்பட்ட காரணம் யாதெனில், ஸஃது (ரலி) அவர்கள் காயம் பட்டவர்களாக இருந்தார்கள். யஹூதிகளுக்கு மத்தியில் தீர்ப்பொன்று வழங்குவதற்காக அவரை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர் ஒரு கோவேறு கழுதையில் சென்று வந்தார். அவர் திரும்பி வந்து சேர்ந்தபோது, நபியவர்கள் அங்கிருந்த மதினாவாசிகளை நோக்கி 'உங்களுடைய தலைவரிடம் எழுந்து சென்று அவரை (வாகனத்திலிருந்து) இறக்கி விடுங்கள்' என்று கூறினார்கள். அப்பொழுது அவர்கள் எழுந்து சென்று அவரை இறக்கி விட்டார்கள்.

இந்த 'கியாம்' (எழுந்து நிற்றல்) மதினாவாசிகளின் தலைவரான ஸஃது (ரலி) அவர்களுக்கு உதவி செய்ய தேவைப்பட்டது. அவர்கள் காயம் பட்டவர்களாகக் கழுதையின் மீது அமர்ந்திருந்தார்கள். அவர்களால் சுயமாக அதிலிருந்து இறங்க முடியாதிருந்தபோது, அவர்கள் விழுந்து விடாதிருப்பதற்காகவே, அவர்களை இறக்கி விடுமாறு அன்ஸாரிகளை நோக்கி மேற்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்களோ, ஏனைய ஸஹாபாக்களோ எழுந்து நிற்கவில்லை.

நபி (ஸல்) அவர்களாலும், அவர்களுடைய உத்தரவின்பேரில் அவர்களது தோழர்களாலும் புறக்கணிக்கப்பட்டிருந்த கஃபு இப்னு மாலிக் (ரலி) அவர்கள் பள்ளிவாசலினுள் நுழையும்போது, அவருடைய தௌபாவை அல்லாஹ் அங்கீகரித்து வஹீ அறிவித்த செய்தியை, அவருக்கு சந்தோசத்துடன் அறிவிப்பதற்காக அங்கு அமர்ந்திருந்த ஸஹாபாக்களில் தல்ஹா (ரலி) அவர்கள் மட்டும் வேகமாகச் சென்று அறிவித்தார். கவலையுடனிருந்த ஒருவருடைய தௌபாவை அல்லாஹ் அங்கீகரித்துள்ளான் என்ற சந்தோசச் செய்தியை அறிவிப்பதற்காக இவ்வாறு எழுந்து செல்வது அனுமதிக்கப்படுகின்றது.

இங்கு கூறப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் உங்களது தலைவர், தல்ஹா (ரலி), பாத்திமா (ரலி) என்று குறிப்பாக வந்துள்ளது. அத்துடன் ஷைகுமார்கள், ஆசிரியர்கள் போன்றோருக்குச் செய்யும் சங்கையும் இதுவும் சமமாக மாட்டாது என்பதை நடைமுறை ரீதியாகக் காணலாம்.

மேலே கூறப்பட்ட ஹதீஸ்களைக் கவனித்துப் பார்த்தால், வீட்டிலுள்ளவர் அல்லது சபையிலுள்ளவர்களில் உதவிக்காச் சிலர், அல்லது சபையிலிருந்த ஒருவர் மட்டும் என்ற நிலையிலேயே எழுந்து கண்ணியப்படுத்தியுள்ளனர். ஆனால் ஷைகு அல்லது ஆசிரியர் (அல்லது அரசியல் தலைவர்) போன்றோருக்காக சபையிலுள்ளோர் அனைவரும் எழுந்து நிற்கின்றனர். இதனால் முன்னையதும் பின்னையதும் நோக்கம் ஒன்றல்ல; சமமானதல்ல என்பதைக் காணலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.